மேலூர், ஜூன் 10-
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு போலீஸ் சரகம் உறங்கான்பட்டியை
சேர்ந்தவர் காசி. இவரது வீடு அருகே வசிப்பவர் ராஜேஸ்வரி. இவர்களுக்கிடையே பாதை
தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று மாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் 3 பேர்
ராஜேஸ்வரிக்கு ஆதரவாக காசியின் வீட்டுக்கு ஆயுதங்களுடன் சென்று தகராறில்
ஈடுபட்டனர். வீட்டில் இருந்தவர்களை தாக்க முயன்றனர்.
இதனால் காசி குடும்பத்தினர் அலறி சத்தம் போட்டனர். அவர்களது சத்தம் கேட்டு
அக்கம் பக்கம் இருந்தவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்களை
பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தப்பி ஓட முயன்றனர்.
உடனே அவர்களை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து ஊரின் மையப்பகுதியில் கல் தூணில்
கட்டி வைத்து தாக்கினர். இதில் ஒருவர் மயக்கமடைந்தார். ராஜேஸ்வரியும் மயங்கி
விழுந்தார்.
இந்த சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனே மேலூர் துணை போலீஸ்
சூப்பிரண்டு மணிரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி ஆகியோர் தலைமையில் போலீசார்
அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதில் ஆயுதங்களுடன் வந்து பொதுமக்களால் தாக்கப்பட்டவர்கள் மேலூர் அருகே உள்ள
சருகுவலைய பட்டியை சேர்ந்த பாக்கியராஜ் (வயது22), இடைய வலசையை சேர்ந்த ரகு (20),
சொக்கம்பட்டி ரமேஷ் (22) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து அரிவாள் மற்றும்
கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
தாக்கப்பட்டதில் மயக்கம் அடைந்த ராஜேஸ்வரி உள்பட 4 பேரும் ஆஸ்பத்திரியில்
சேர்க்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி
வைக்கப்பட்டனர். காசி மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் தனித்தனியாக கொடுத்த புகாரின்
பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
அன்புடன் நன்றி
மாலைமலர்
சக்தி
No comments:
Post a Comment