Saturday, June 23, 2012

மேலூரில் போதையில் ரோட்டில்கிடந்த 10ம் வகுப்பு மாணவர்

மேலூர்:மதுரை மாவட்டம் மேலூரில் எழுத்துக்களை அழிக்க பயன்படும் ஒயிட்னர்களை போதைக்கு பயன்படுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு மாணவர் போதை அதிகரித்து புத்தக பையுடன் ரோட்டில் கிடந்தார்.தவறாக எழுதியதை அழிக்க "ஒயிட்னர்' என்ற கரெக்ஷன் புளூயிட் திரவம் பயன்படுகிறது. ரூ.30 கொடுத்து இவற்றை வாங்கும் மாணவர்கள் நூல்கண்டில் திரவத்தை ஊற்றி, கசக்கி நுகர்கின்றனர். தண்ணீர் பாக்கெட்டில் ஊற்றி வாயால் உறிஞ்சுகின்றனர். இதில் போதை ஏற்படுகிறது. அடிமையாகும் மாணவர்கள், நண்பர்களுக்கும் பழக்கி விடுகின்றனர்.நேற்று காலை மேலூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உசேன் பஜார் முன், பள்ளி மாணவர் ஒருவர், மயங்கி விழுந்தார். அவரை அருகில் உள்ள கடையில் படுக்க வைத்தனர். அவரது புத்தக பையை ஆராய்ந்த போது, மேலூரிலுள்ள மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படிப்பவர் என தெரிந்தது. ஒயிட்னர் என்ற டெலுட்டர், கரெக்ஷன் புளூயிட் பாட்டில்கள், நூல் கண்டு ஆகியவை புத்தக பையில் இருந்தன. மயங்கிய மாணவர் போதையில் இருந்தது தெரிந்தது. இவரை போல பல மாணவர்கள் இந்த போதைக்கு அடிமையாக இருப்பதாக மாணவர் கூறினார். சிறு வயதில் போதைக்கு அடிமையாகும் இம்மாணவர்கள் குறித்து ஆசிரியர்கள் விசாரித்து பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும். வீட்டிலிருந்து செல்லும் குழந்தைகள் பள்ளிக்கு ஒழுங்காக சென்றார்களா என கண்காணிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் போதையால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.
                                                          நன்றி தினமலர்

No comments: