துபாய்: துபாயில் நடந்த 2வது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் ஈடிஏ அஸ்கான் மேலாண்மை இயக்குனருக்கு உலகத் தமிழர் மாமணி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
துபாயில் 2வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு கடந்த 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை உலக வர்த்தக மைய கன்வென்ஷன் அரங்கில் நடந்தது.
நிறைவு விழாவன்று சென்னை வளர்ச்சிக் கழக தலைவர் டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத் வரவேற்புரை நிகழ்த்தினார்
நிறைவு விழாவில் துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் சையது எம். ஸலாஹுத்தீன், மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு, தோஹா வங்கி தலைமை நிர்வாக அதிகாரி சீதாராமன், மொரீஷியஸ் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன், அமெரிக்க டாக்டர் பி. ஆதிநாராயணன், ஆஸ்திரேலிய டாக்டர் பால் மொமினிக், மாஸ்கோ பாஸ்கரன், குவைத் ராஜா, சிங்கப்பூர் திருநல் கரசு பழனியப்பன் உள்ளிட்டோருக்கு ‘உலகத் தமிழர் மாமணி’ விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை ஆற்காடு இளவரசர் நவாப் முஹம்மது அப்துல் அலி மற்றும் இந்திய பணியாளர் நலம் மற்றும் ஓய்வூதிய நல இணையமைச்சர் வி. நாராயணசாமி ஆகியோர் வழங்கினார்கள்.
நெல்லைச் சீமையைச் சேர்ந்த அமீரகத்தின் அப்போலோ குழும தொழில் அதிபர் ஜமால் மீரான் சமீபத்தில் மரணமடைந்தார். அன்னாரின் உருவப்படத்தினை அமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நிறைவுப் பேருரை நிகழ்த்திய நாராயணசாமி கூறியதாவது,
இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி அபரிமிதமானது. உலகப் பொருளாதாரத்தில் சீனாவுக்கு ( 11 % ) அடுத்தபடியாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9 % என்ற அளவில் இருந்து வருகிறது. உணவுக்காக வெளிநாட்டினை எதிர்பார்த்திருந்த காலம் போய் இன்று இந்தியத் திருநாட்டிலேயே அனைத்து உணவுப் பொருட்களும், விலை பொருட்களும் கிடைக்கின்றன. இவற்றை வைப்பதற்கு தானிய வைப்பறை தான் போதிய அளவு இல்லை.
20.10.2011 அன்று வெளியான தானிய உற்பத்தி அறிக்கையிலிருந்து 234 மில்லியன் டன் உணவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது. இவற்றினை இந்தியாவின் 65 சதவீத மக்களுக்கு இலவசமாகவே வழங்கலாம். 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் வாங்குவது அரிதாக இருந்த காலம் போய் இன்று அனைத்து வித வாகனங்களும் இந்தியாவிலும், தமிழகத்திலும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்த வரையில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மக்கள் தொகையில் 50 சதவீதம் உள்ளனர். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை 20 முதல் 35 வயதுடையோர் 65 சதவீதம் உள்ளனர். இதுவும் நமது பொருளாதார வளர்ச்சிக்கு மற்றுமோர் முக்கியக் காரணம். மேலும் உற்பத்தி திறன் அதிகரித்திருப்பது போன்று மக்களின் வாங்கும் சக்தியும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று சுற்றுலாத்துறை மிகப்பெரும் வளர்ச்சியினை எட்டியுள்ளது. இந்தியாவிற்குள்ளே ஒவ்வொரு மாநிலத்தவரும் சுற்றுலா செல்வதில் ஆர்வம் காட்டி வருவது ஆரோக்கியமான விஷயமாகும்.
உலக அளவில் பொருளாதார ஸ்திரத்தன்மை அதிகரித்த போதும் இந்தியாவின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிப்படையவில்லை. மருத்துவத் துறையிலும் இந்தியாவை தேடி வருவோர் ஏராளம். இந்தியத் திருநாட்டில் வாய்ப்புகள் அதிகம். அதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்றார்.
ஆற்காடு இளவரசர் நவாப் முஹம்மது அப்துல் அலி அவர்கள் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்திப் பேசினார். அவர் பேசியதாவது,
எங்கள் முன்னோர்கள் தென்னிந்தியாவின் பெரும்பகுதியை ஆண்டனர். அப்போது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், ஸ்ரீரங்கம் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கு நிலங்களைத் தானமாகக் கொடுத்தனர். திருக்குர்ஆன் கூறியபடி அவர்கள் மதம் அவர்களுக்கு எனும் வாக்கிற்கேற்ப ஒவ்வொருவரும் பிற சமயத்தாரை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
மேற்குலகினர் இஸ்லாம் என்றால் தீவிரவாதம் என்ற தவறான கருத்தினைக் கொண்டுள்ளனர். இந்நிலை மாறவேண்டும். தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் நிறைந்துள்ளன். அவற்றைப் பயன்படுத்தி உலக அரங்கில் நாம் முன்னிலை பெற முடியும்.
ஒரு சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் இளைஞர்களை தவறான வழிக்கு பயன்படுத்துகின்றன. இவை தடுக்கப்பட வேண்டும் என்றார்.
தங்கவேல் நன்றியுரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் தமிழக வர்த்தகப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்