Thursday, November 22, 2012

யார் இந்தஅஜ்மல் கசாப்?


  கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி பாகிஸ்தானிலிருந்து கடல் வழியாக படகு மூலம் மும்பையில் ஊடுருவிய லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள், ரயில் நிலையம் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் புகுந்து தாக்குதல் நடத்தினர்.பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து 60 மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், பாதுகாப்புப் படையினர், வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். இதில் 9 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.  இதில்  உயிருடன் பிடிபட்டவன்தான் இந்த கசாப்.

அஜ்மல் கசாப், பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பரித்கோட் என்ற கிராமத்தில் 1987, செப்.,13ம் தேதி பிறந்தான். முழுப்பெயர் முகமது அஜ்மல் அமீர் கசாப். பெயர் குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. பல பெயர்களில் இவன் அழைக்கப்பட்டான். பெற்றோர் ஷாபன் கசாப், நூர் இலாஹி. தந்தை பானி பூரி வியாபாரி. கசாபுக்கு இரண்டு சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.

2005ம் ஆண்டு, தந்தையுடன் சண்டையிட்டு, வீட்டை விட்டு வெளியேறினான். லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்தான். இவனுடன், 24 பேருக்கு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயிற்சி அளிக்கப்பட்டது. முதலில் உளவியல் ரீதியான பயிற்சி அளிக்கப்பட்டு, பின், படிப்படியாக நவீன ஆயுதங்களை கையாளுதல், இலக்கை தாக்குதல், கடலில் பயணம் செய்தல், நீச்சல், பாய்மர படகை இயக்குதல் போன்ற பயிற்சிகள் தரப்பட்டன.பயிற்சி பெற்ற குழுவிலிருந்து, சிறந்த 10 பேரை தேர்வு செய்து, மும்பை தாக்குதலை நடத்தினர். இதற்காக கசாப்புக்கு, 1.5 லட்சம் ரூபாய்

கொடுக்கப்பட்டது.

Monday, November 19, 2012

துபாயில் அடுக்கு மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து

Jumeirah Lake Towers (JLT
துபாயில்,34அடுக்கு மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.துபாயில், "ஜுமிரா லேக் டவர்ஸ்' என்ற கட்டடத்தில், நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 34 அடுக்குகள் கொண்ட இந்த கட்டடத்தில் தங்கியிருந்தவர்கள், உடனடியாக மீட்கப்பட்டனர்.
எனவே, யாரும் காயமடையவில்லை. ஆனால், கட்டடத்தில் இருந்த பொருட்கள் தீயில் கருகி நாசமாயின.மேலும் கட்டடத்தின் கீழே இருந்த கார்களும் சேதமானது . தீ விபத்துக்கான காரணம் குறித்து, விசாரணை நடக்கிறது




அன்புடன்
சக்தி

Wednesday, November 14, 2012

‘தீபாவளி ஸ்பெசல்' லேகியம்

தீபாவளிக்கு எண்ணெய் பலகராமும், நெய்யில் செய்த பட்சணங்களையும் ஒரு கட்டு கட்டியிருப்போம். திடீரென்று அதிக அளவில் எண்ணெய் பலகாரங்களை சாப்பிட்டதால் வயிறு கடா முடா என்று ஒரு வழி செய்து விடும். அஜீரணக் கோளாறு வேறு அவஸ்தையை ஏற்படுத்திவிடும். இதில் இருந்து தப்பிக்க கைவசம் ‘தீபாவளி ஸ்பெசல்' லேகியம் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவேண்டும் என்கின்றனர் அனுபவஸ்தர்கள்.


தீபாவளி லேகியம் செய்ய தேவையானப் பொருட்கள்
பெருங்காயம் - 25 கிராம்பேரிச்சை - கால் கிலோ
வெல்லம் - 100 கிராம்சீரகம் - 3 டீ ஸ்பூன்வால்மிளகு - 2திப்பிலி - 2
நெய் - 25
உப்பு - கால் டீ ஸ்பூன்
செய்முறை
பேரிச்சையை சுடுதண்ணீரில் நன்கு ஊறவைத்து, கொட்டையை நீக்கி மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
வெல்லம் தவிர சீரகம், திப்பிலி, வால்மிளகு, பெருங்காயம் ஆகியவற்றை பொடி செய்யவும்.
அடுப்பில் கடாயை வைத்து வெல்லத்தை பொடித்து போடவும். நெய் சேர்த்து கரைந்த உடன் பேரிச்சையை போடவும். இதனுடன் பொடித்து வைத்துள்ள கலவையைப் போட்டு கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். உப்பு சேர்த்து நன்கு கிளறவேண்டும். கலவை திரண்டு திக்காகி அல்வா பதம் உடன் இறக்கி ஆறவைத்து பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.
தீபாவளி லேகியம் சாப்பிடுவதன் மூலம் அஜீரணம் ஏற்படாது, வயிறுப் பொருமல் இருக்காது. சளி பிடிக்காது.
இதேபோல் மிளகு, இஞ்சி, ஓமம், திப்பிலி, கொத்தமல்லி, மஞ்சள்தூள், கசகசா, இலவங்கம், ஏலம், வெல்லம், நெய், நல்லெண்ணெய் சேர்த்து வேறு விதமாகவும் தீபாவளி லேகியம் செய்யலாம்.
தீபாவளி லேகியம் கையில் இருந்தால் தைரியமாக தீபாவளி பலகாரத்தை ஒரு பிடி பிடிக்கலாம்.
அன்புடன்
 சக்தி

Friday, November 09, 2012

இஸ்லாமியர்களுக்கு எதிரான படமா விஸ்வரூபம்? - கமல் பதில்

எந்த மதத்துக்கும் நான் எதிரி இல்லை. விஸ்வரூபம் படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானதில்லை, என்று கமல்ஹாஸன் தெரிவித்துள்ளார்.
விஸ்வரூபம் படம் ‘ஆரோ 3டி' ஒலி தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ளது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. டிரெய்லரை வெளியிட்டு கமலஹாசன் நிருபர்களிடம் பேசுகையில், விஸ்வரூபம்' இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிரான படமா? என்று கேட்டனர்.

அதற்கு கமல் பதிலளிக்கையில், "அப்படி நான் படம் எடுப்பேனா? இந்த படம் எந்த மதத்துக்கும் எதிரானது அல்லது. இந்தியாவில் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனபதே என் விருப்பம்.
நான் காந்தியின் பக்தன். இங்கு எந்த மதத்தினர் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று பார்க்க மாட்டேன். மனிதர்களைத்தான் பார்க்கிறேன். மதங்களை கொண்டாடுவது இல்லை. மனிதர்களை கொண்டாடுகிறேன். எந்த மதத்தினரையும் வித்தியாசமாக பார்ப்பது இல்லை. இந்த படமும் அப்படித்தான் இருக்கும். காந்தீய வழியிலேயே எனது அணுகுமுறைகளும் இருக்கும்," என்றார்.
அன்புடன்
 சக்தி

Friday, October 26, 2012

ம‌துரை- துபாய் இடையேயான நேர‌டி விமான‌ போக்குவரத்து

வ‌ளைகுடாவில் ப‌ணியாற்றும் தென் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் ப‌ல்லாண்டு க‌ன‌வான  ம‌துரை- துபாய் இடையேயான  நேர‌டி விமான‌ போக்குவரத்து  நிறைவேறும் சூழ்நிலை உருவாகி உள்ள‌து.மதுரையில் இருந்து துபாய், சார்ஜா ஆகிய பகுதிகளுக்கு விமானம் இயக்குவது குறித்த கலந்து ஆலோசனை கூட்டத்திற்கு ஈடிஏ நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் துபாயில் உள்ள‌ த‌மிழ் அமைப்புக‌ள் ம‌ற்றும் ஏர் இந்தியா நிறுவ‌ன‌ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்ட‌த்தில் ஏர் இந்தியா உள்நாட்டு மேலாள‌ர் மோக‌ன் பாபு, விற்ப‌னை மேலாள‌ர் ஆஸ்லி ரெவ்லோ, ஷார்ஜா விமான‌ நிலைய‌ மேலாள‌ர் க‌ண்ண‌ன், ஏர் இந்தியா துபாய் ச‌ர்வ‌தேச‌ மேலாள‌ர் ராதாகிருஷ்ண‌ன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஈடிஏ ம‌னித‌வ‌ள‌ மேம்பாட்டு துறை நிர்வாக‌ இய‌க்குனர் அக்ப‌ர்கான், ஈடிஏ வியாபாரம் மற்றும் கப்பல் துறை இய‌க்குந‌ர் நூருல் ஹ‌க், ஈடிஏ மத்திய கணக்கு துறை மேலாள‌ர் ஹ‌மீதுகான், ஈடிஏ த‌லைமை அலுவ‌ல‌க‌ மேலாள‌ர் மீரான், அமீர‌க‌த்தில் உள்ள‌ த‌மிழ‌க‌ அமைப்புக‌ள் சார்பில் ஜெக‌ந்நாத‌ன், அக‌ம‌து முகைதீன், கீழைராஸா, ஹ‌மீது ர‌ஹ்மான், ய‌ஹ்யா முகைதீன், கீழையாசீன், முதுவை ஹிதாய‌த் உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.
கலந்துரையாடல் கூட்டத்தில், அமீர‌க‌த்தில் 2 ல‌ட்ச‌ம் த‌மிழ் பேசும் ம‌க்க‌ள் வசிக்கின்ற‌ன‌ர். இவ‌ர்க‌ளில் தென் த‌மிழ‌க‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ள் நீண்ட‌தூர‌த்தில் உள்ள‌ விமான‌ நிலைய‌ங்க‌ளில் இருந்து த‌ங்க‌ளின் ஊர்க‌ளுக்கு செல்ல அவதிப்படுவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் ம‌துரையில் இருந்து துபாய், சார்ஜா போன்ற‌ ந‌க‌ர‌ங்க‌ளுக்கு விமான‌ங்க‌ள் இய‌க்க‌ப்பட்டால், ஏர் இந்தியாவுக்கு லாப‌க‌ர‌மான‌ வான் வ‌ழியாக‌ அமையும் என்றும், கேர‌ளாவிற்கு அதிக‌ விமான‌ங்க‌ள் இய‌க்கப்படுவ‌து போல் த‌மிழ‌க‌த்திற்கும் இய‌க்க‌ வேண்டும் என்றும், அதற்கான அனைத்து ஒத்துழைப்பும் ஈடிஏ மற்றும் த‌மிழ் ச‌ங்க‌ங்க‌ள் சார்பில் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் என்று தெரிவிக்கப்பட்டது.

Thursday, October 04, 2012

துபாயில் இலவச வேலைவாய்ப்பு சேவைஇணையதளம்

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட் தமிழ் சங்கம் சார்பில், இலவச வேலைவாய்ப்பு சேவை இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. வேலை தேடும் நபர்கள் இந்த இணையதளத்தில் தங்களின் விபரங்களை பதிவு செய்து பயன் பெறலாம்.

ஐக்கிய அரபு எமிரேட் தமிழ் சங்கம் சார்பாக இலவச வேலை வாய்ப்பு சேவை துவக்கப்பட்டுள்ளது. இதற்காக தனி இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வேலை தேடுவோர் தங்களின் பெயர், முகவரி, செல்போன் எண் உட்பட முழு விபரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதன்மூலம் ஐக்கிய அரபு எமிரேட் தமிழ் சங்கத்தின் இணையதளத்திற்கு வந்து செல்லும் நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளும். தமிழ் சங்கத்தின் இணையதளத்தில் வெளியாகி உள்ள நபரை, ஏதாவது நிறுவனம் மூலம் தேர்வு செய்ய விருப்பம் தெரிவித்தால், இது குறித்த தகவல் அந்த நபருக்கு தெரிவிக்கப்படும்.
இந்த இலவச சேவையை அனைவரும் பயன்படுத்தி பயன்பெறுமாறு ஐக்கிய அரபு எமிரேட் தமிழ் சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான ரமேஷ் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் விபரங்கள் மற்றும் உதவிக்கு, www.uaetamilsangam.com/utshelpdesk.asp என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
வேலை தேடுவோர் தங்களின் விபரங்களை பதிவு செய்ய www.uaetamilsangam.com/Jobcandwanted.asp என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம்.
அன்புடன்
சக்தி

Sunday, September 30, 2012

துபாய் மருத்துவமனையில் 3 ஆண்டுக்கும் மேல் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதியவர்

துபாய்: துபாய் மருத்துவமனையில் திருநெல்வேலி அருகேயுள்ள பாப்பையாபுரத்தைச் சேர்ந்த சுடலைமுத்து ராஜகோபால் ( வயது 71 ) எனற முதியவர் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இருதய பாதிப்பு மற்றும் பக்கவாதத்தின் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரை துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) சார்பில் அதன் ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத் சந்தித்தார்.

திருநெல்வேலி அருகேயுள்ள பாப்பையாபுரத்தைச் சேர்ந்தவ சுடலைமுத்து ராஜகோபால். வயது 71. கடந்த 1976ம் ஆண்டு துபாய் வந்ததாகவும், மருத்துவமனையில் சேர்க்கப்படும் வரை டிரைவராக பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்தார். தனக்கு பத்மா மற்றும் சுந்தராம்பாள் ஆகிய இரு மனைவிகள் இருப்பதாகவும் அவர்களில் மூத்த மனைவிக்கு ஐந்து குழந்தைகளும், இரண்டாவது மனைவிக்கு நான்கு குழந்தைகளும் இருப்பதாக தெரிவித்தார். மூத்த மனைவி பத்மா தன்னைக் காண துபாய் வந்திருப்பதாகவும், இரண்டாவது மனைவி சுந்தராம்பாள் புதுக்கோட்டையில் இருந்து வருவதாகவும் தெரிவித்தார். இவர் சிலநேரம் மனநலம் சரியில்லாதவரைப் போல் பேசுகிறார். எனவே இவர் கூறும் தகவல்கள் எந்த அளவு உணமையானது எனத் தெரியவில்லை.
ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி மற்றும் அதன் துணைப் பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா ஆகியோரது முயற்சியில் இந்திய கன்சுலேட்டின் உதவியின் மூலம் தாயகத்தில் உள்ள அவரது குடும்பத்தினருடன் சேர்ப்பிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவ்வாறு அவரை எவரும் ஏற்றுக்கொள்ள இயலாத பட்சத்தில் ஏதேனும் ஒரு ஆதரவற்றோர் இல்லம் தமிழகத்தில் ஏற்றுக்கொள்ள முன்வருமானால் அங்கு சேர்த்திட முயற்சி மேற்கொள்ளப்படும்.

இவரைப் பற்றிய முழு தகவல்கள் தெரிந்தவர்கள் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளை 050 51 96 433 / 050 467 43 99 எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் தெரிவித்து உதவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

அன்புடன் சக்தி

Friday, September 14, 2012

பாவம் நடிகைகள்...!:

முன்பெல்லாம் சினிமாவில் கவர்ச்சி காட்டி நடிப்பதற்கென தனியாக சில காட்சிகளில் சில நடிகைகள் வந்து போவார்கள், அவர்களுக்கு கவர்ச்சி நடிகை என்றும் பெயர். ஆனால் இப்போது கதாநாயகிகளே போதும், போதும் என்று பயப்படுமளவிற்கு கவர்ச்சி காட்டி, நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். துட்டுக்கு ஏற்ற கவர்ச்சி என்பதால், மீட்டர் ஏற, ஏற உடுத்தியிருக்கும் உடையின் அளவு குறைவதுதான் கவலைக்குரிய அம்சமாகிவிட்டது. சினிமாவிற்கு பெரிய பட்ஜெட் போடுபவர்கள் நடிகைகளின் உடைகளுக்கு மட்டும் ‘துண்டு’ பட்ஜெட் போடுவதை பார்த்து வெறுத்துப் போன ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டர் இது.
அன்புடன்Photo Gallery
 சக்தி

மதுரையில் புல்லட் "தீ' வண்டி


 மதுரையில், தீயணைப்பு வண்டி சென்று அணைக்க முடியாத இடங்களில், புல்லட்டில் சென்று தீயை அணைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தீயணைப்பு வண்டியால் குறுகலான இடங்களுக்கு சென்று, உடனடியாக தீயை அணைக்க முடிவதில்லை. இதைதவிர்க்க, டூவீலரில் 9 லிட்டர் ரசாயனம் கலந்த நீரை எடுத்துச் சென்று, நுரையாக பீய்ச்சி அணைக்கும் முறை அறிமுகப்படுத்த தீயணைப்புத் துறை முடிவு செய்தது.

 தற்போதைக்கு தல்லாகுளம் நிலையத்திற்கு ஒரு புல்லட் "தீ' வண்டி வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.6.7 லட்சம். இதற்கென தனி வீரர் இன்னும் நியமிக்கப்படவில்லை. இதற்கும் தொடர்பு எண் 101 தான்
மதுரையில் பல பகுதிகள் குறுகலாகவும், சிறியதாகவும் இருப்பதால், உடனடியாக இதை அமல்படுத்த வேண்டிய அவசியம் என தினமலர் செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக, புல்லட்டில் சென்று தீயை அணைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அன்புடன்
 சக்தி

Friday, August 10, 2012

மனிதனோடு வாழ்ந்த இன்னொரு மனித இனம்..

லண்டன்: மனிதர்களின் உயிரியல் பெயர் ஹேமோ சேப்பியன்ஸ் (Homo sapiens).




பரிணாம வளர்ச்சியில் ஒரு செல் உயிரிகளில் இருந்து பல வகையான உயிர்கள் உருவாயின என்பது டார்வினின் கொள்கை.



அவ்வாறாக 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இப்போதைய மனித இனமான ஹேமோ சேப்பியன்ஸ் உருவானது என்கிறது பரிணாம விதி எனப்படும் evolution theory.



ஆனால், அப்போது ஹேமோ சேப்பியன்ஸ் மட்டுமல்ல, மேலும் ஒரு மனித இனமும் இருந்தது என்பதை இப்போது கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்.



கென்யா நாட்டின் துர்கானா ஏரியின் படுகையில் நடந்த அகழ்வாராய்ச்சியில் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய மனித இனத்தின் எலும்புக் கூடுகளின் படிமங்கள் (fossil) கிடைத்துள்ளன.



துர்கானா ஏரிப் பகுதியில் தான் ஏராளமான மிகப் பழமையான மனித உடல்களின் படிமங்கள் அடுத்தடுத்து கிடைத்து வருகின்றன. இதனால் இந்தப் பகுதிக்கு 'மனித குலத்தின் தொட்டில்' (cradle of mankind) என்ற பெயரே உண்டு.



இங்கு இப்போது கிடைத்துள்ள மனித உடல் படிமங்களை ஆராய்ந்ததில், அவை ஹேமோ சேப்பியன்ஸ் இனத்தின் படிமம் அல்ல என்பது தெரியவந்துள்ளது. மாறாக அவை மனித இனத்தின் இன்னொரு வகையான உயிர் என்பது தெரியவந்துள்ளது.



ஏற்கனவே 40 ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற ஒரு படிமும் கிடைத்து. அதற்கு '1470' என அடையாளப் பெயர் சூட்டப்பட்டது. இப்போது மீண்டும் அதே போன்ற ஒரு படிமம் கிடைத்துள்ளது.



இந்த மனித வகையினரின் மூளை மிகப் பெரிதாக இருந்துள்ளதும், தலை நீண்டு இருந்ததும், அதே நேரத்தில் முகம் வட்ட வடிவமின்றி ஒடுங்கி இருந்ததும், கீழ் தாடை மிக மிக பலமானதாகவும் இருந்ததும் தெரியவந்துள்ளது.



மனித இனத்துக்கு முந்தைய இனமாகக் கருதப்படுபவை ஹோமோ எரெக்டஸ் (Homo erectus), ஹேமோ ஹபிலிஸ் (Homo habilis) ஆகியவை. இதிலிருந்து பரிமாண வளர்ச்சி அடைந்தே ஹேமோ சேப்பியன்ஸ் என்ற இப்போதைய மனித இனம் உருவானது.






இந் நிலையில் இப்போது கிடைத்துள்ள படிமங்களை ஆராய்ந்ததில் அது இன்னொரு வகையான மனித இனம் என்பது உறுதியாகியுள்ளது. இதற்கு Homo rudolfensis என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

முன்னணி உயிரியல் அகழ்வாராய்ச்சி விஞ்ஞானியான பேராசிரியர் மீவ் லீக்கி தலைமையிலான டீம் தான் இந்த படிமத்தை துர்கானா ஏரியின் 10 கி.மீ. தொலைவில் தோண்டியெடுத்துள்ளது. இதற்கு Homo rudolfensis என பெயர் சூட்டியுள்ள இந்தக் குழு, இந்தப் படிமங்கள் 1.78 மில்லியன் முதல் 1.95 மில்லியன் ஆண்டுகள் வரை பழமையானது என்றும் கூறியுள்ளது.
கீழ் தாடை மிக பலமானதாகவும், முகம் ஒடுங்கியும் இருப்பதைப் பார்த்தால், இந்த இனம் கடிப்பதில் மிக சிறந்ததாக இருந்திருக்க வேண்டும். இந்த இனமும் ஹோமோ சேப்பியன் மனித இனமும் ஒரே காலகட்டத்தில் வசித்துள்ளனர் என்கிறார் மீவ் லீக்கி.

இந்த ஹோமோ எரெக்டஸ், ஹேமோ ஹபிலிஸ், ஹோமோ ருடால்பெனிஸ், ஹோமோ சேப்பியன்ஸ் ஆகிய எல்லா இனங்களுமே சிம்பன்சிக்கள், போனோபோஸ் ஆகிய குரங்கு இனங்களில் இருந்து தான் உருவாயின என்பது தான் பரிணாம விதி சொல்லும் கோட்பாடாகும்

அன்புடன்
 சக்தி

வளைகுடா நாடுகளில் பணிபுரிய ‌நேபாள பெண்களுக்கு தடை

  காத்மாண்டு: 30வயதுக்‌கு கீழ் உள்ள பெண்கள் வளைகுடா நாடுகளுக்கு சென்று பணி புரிவதற்கு நேபாள அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கிஷோர் ‌யாதவ் கூறியதாவது: நேபாள நாட்டைச்சேர்ந்த 30 வயதுக்கும் குறைவான பெண்கள் பெரும்பாலானோர் வளைகுடா நாடுகளில் வீட்டு பணிப்பபெண்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அங்கு பாலியல் வன்முறைக்கு ஆளாவதாக தொடர்ந்து புகார் வருவதையடுத்து அமைச்சரவை இம் முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். ‌‌ வளைகுடா நாடுகளில் நேபாள நாட்டு பெண்கள் தவிர இலங்கை , பிலிப்பைன்ஸ் போன்ற நாட்டை சேர்ந்த பெண்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். நேபாள நாட்டு அரசு மட்டு‌மே 30 வயதுக்குட்பட்ட பெண்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிய தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஏற்கனவே இந்ததடை 1998 -ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கடந்த 2010-ம் ஆண்டு விலக்கிக்‌கொள்ளப்பட்டது. தற்போது மீண்டும் அந்த தடை அமல்படுத்தபடுத்தப்பட்டுள்ளது.





அன்புடன்
 சக்தி

Thursday, July 26, 2012

மேலூரில் வாந்தி-வயிற்று போக்கு 70 பேர் பாதிப்பு

மேலூர் பகுதியில் வாந்தி-வயிற்று போக்கு காரணமாக 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.




அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலூரில் உள்ள அண்ணாகாலனி, முகமதியார்புரம், காந்திஜி பூங்கா ரோடு, நொண்டிகோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 70 பேருக்கு திடீரென வாந்தி-வயிற்று போக்கு ஏற்பட்டது. இவர்கள் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.



இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, இப்பகுதிகளில் குடிநீர் அசுத்தமாக வருகிறது. சுற்றுப்புற சுகாதாரமும் இல்லை. ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடப்பதால் கொசு தொல்லைகளும் அதிகரித்து உள்ளது. சுகாதாரமற்ற குடிநீரை குடிப்பதால் தான் இதுபோன்ற நோய் தாக்கப்படுகிறது. எனவே சுகாதாரதுறை அதிகாரிகள் உடனடியாக இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.



இதுபற்றி நகரசபை கமிஷனர் பாஸ்கரசேதுபதி கூறும்போது, வினியோகிக்கப்படும் தண்ணீர் சுத்தமாக தான் உள்ளது. இருப்பினும் தண்ணீரை ஆய்வுக்காக அனுப்பி இருக்கிறோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு கெட்டுபோன மீன்கள் குறைந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சமைத்து சாப்பிட்டதாலும், கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழத்தை சாப்பிட்டதாலும்தான் வாந்தி-வயிற்றுபோக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கெட்டுபோன பொருட்களையோ கல் மூலம் பழுக்க வைத்த பழங்களையோ சாப்பிட வேண்டாம். கல் மூலம் பழுக்க வைத்த மற்றும் கெட்டுபோன பொருட்களை விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அன்புடன்
 சக்தி

யுடியூப்பில் இனி உண்மையான பெயரை வெளியிட வேண்டும்!




கூகுளின் பொழுதுபோக்குத் தளமான யுடியூப்புக்கு உலக அளவில் ஏராளமான ரசிகர்களும் உறுப்பினர்களும் உள்ளனர். இந்த யுடியூப்பில் நினைக்கும் வீடியோக்களைப் பதிவேற்றம் செய்யலாம். மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களைப் பார்க்கலாம். அவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். மேலும் அந்த வீடியோக்களுக்கு விமர்சனங்களும் எழுதலாம்.



ஒவ்வொரு நாளும் யுடியூப்பில் ஏராளமானோர் வீடியோக்களைப் பதிவேற்ற் செய்கின்றனர். அவ்வாறு பதிவேற்றம் செய்யும் போது ஒரு சிலர் தங்களது உண்மையான பெயர்களைக் குறிப்பிடுகின்றனர். ஆனால் பெரும்பாலோர் தங்களது புனைப் பெயர்களையேத் தருகின்றனர்.



மேலும் யுடியூப்பில் வரும் வீடியோக்களில் பெரும்பாலானவை ஆபாசமானதாகவும், அர்த்தமற்றதாகவும், இனவெறியைத் தூண்டுவதாகவும் உள்ளதாக ஏராளமான விமர்சனங்கள் வருகின்றன. இந்த வீடியோக்கள் பெரும்பாலும் புனைப் பெயர்களில் வருவதால் இதை பதிவேற்றம் செய்தவர்களைக் கண்டுபிடிப்பதும் கடினமாக இருக்கிறது.



ஆகவே தரமில்லாத மற்றும் அர்த்தமற்ற வீடியோக்களைக் களைய வேண்டும் என்பதற்காக கூகுள் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி இனி யுடியூப்பில் எந்த வீடியோவை பதிவேற்றம் செய்தாலும் பதிவேற்றம் செய்பவர்கள் தங்களது உண்மையான பெயர்களைக் குறிப்பிட வேண்டும்.



மேலும் வீடியோக்களுக்கு விமர்சனம் எழுதுபவர்களும் தங்களது உண்மையான பெயர்களையே குறிப்பிட வேண்டும் என்று கூகுள் அறிவித்திருக்கிறது. அதற்காக அவர்கள் குகூள்+ல் சைன் அப் செய்ய வேண்டும்.



அவ்வாறு தங்களது உண்மையான பெயர்களை வெளியிட விரும்பாதவர்கள் ஒரு சில வாய்ப்புகளையும் வழங்குகின்றன. அதில் அவர்கள் தங்களுது பெயர்களை வெளியிடாததற்கான காரணங்களை அவர்கள் வெளியிட வேண்டியிருக்கும்.



இந்த அறிவிப்பின் மூலம் யுடியூப்பில் வீடியோக்களை வெளியிடுபவரைப் பற்றி கூகுள் அறிந்து கொள்ள விரும்புகிறது. மேலும் வரும் காலங்களில் யுடியூப்பில் பதிவேற்ற பெயரைக் குறிப்பிட வேண்டியது கண்டிப்பாகிவிடும் என்று தெரிகிறது.



எவ்வாறு பேஸ்புக்கில் உறுப்பினர்கள் தங்களது உண்மையான பெயர்களைக் குறிப்பிடுகிறார்களோ அதுபோன்றே யுடியூப்பிலும் நிகழ வேண்டும் என்று கூகுள் விரும்புகிறது. அது நடக்குமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



அன்புடன்
 சக்தி

Wednesday, July 11, 2012

நீங்க சரியா சாப்பிடுறீங்களா?


நம் உடல், நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு எனும் பஞ்சபூதங்களால் ஆனது. நம் நாக்கிலேயே, பஞ்சபூதங்களும் உள்ளன. திடீரென காரமாக சாப்பிடத் தோன்றினால், நம் உடம்பில், காற்றின் அங்கம் குறைவாக உள்ளதென அர்த்தம். இதே போல், காரம், துவர்ப்பு காற்றின் அங்கம்; இனிப்பு நிலத்தின் அங்கம்; ஆகாயம் - புளிப்புத் தன்மை, நீருக்கு - உப்பு, நெருப்புக்கு - கசப்பு. பஞ்சபூதங்களின் என்ன தன்மைகள், நம் உடம்பில் குறைகிறதோ, அது தேவை என்பதை, நம் நாக்கு சொல்லும்.சாப்பிடும் போது, மெதுவாக, மென்று சாப்பிட வேண்டும். வாயின் இருபுறமும், உணவை நன்றாக பரப்பி மெல்ல வேண்டும். அப்போது தான், உமிழ்நீர் நன்றாக ஊறி, உணவுடன் இரண்டறக் கலந்து, செரிமானத்தை எளிதாக்கும். தண்ணீர் குடித்து, 15 நிமிடம் கழித்துத் தான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டிற்குப் பின், அரை மணி நேரம் கழித்துத் தான், தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிக்கும் போது, நன்றாக வாயில் பரப்பி, அமைதியாக ருசித்து குடிக்க வேண்டும்.எந்த ஒரு காய் சாப்பிட்டாலும், அடுத்து குறைந்தபட்சம், 11 நாட்களுக்கு அதை ஒதுக்க வேண்டும். ஒரே காய்கறியை தொடர்ந்து சாப்பிட்டால், ஒரே விதமான சத்து தான் உடலுக்கு கிடைக்கும். இன்று, உணவில் துவரம் பருப்பு சேர்த்தால், நாளை பாசிப் பருப்பு சேர்க்க வேண்டும்.சாப்பிடும் போது, இரண்டு உதடும் சேர்ந்தே இருக்க வேண்டும். உள்ளுக்குள்ளேயே உணவு நொறுங்க வேண்டும். சாப்பிடும் போது பேசினால், காற்று உள்ளே போய், உணவுடன் கலந்து, வாயு சேர்ந்துவிடும்.காலையில் யோகா, மூச்சுப் பயிற்சி செய்துவிட்டு, அரை எலுமிச்சம்பழம், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும். இதில், உடலுக்கு தேவையான இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, லேசான கசப்பு கிடைக்கும். இது, உடம்பின் பஞ்சபூத சக்தியை ஈடு செய்யும்.காலையில் சத்தான உணவு, மதியம் மிதமான உணவு, இரவு மிக லேசான உணவு. இது தான், உடலை எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்க வைக்கும்!
                                                                                         உமா வெங்கடேஷ்
அன்புடன்                                                        நாடி சமன்படுத்துதல் மருத்துவர்
  சக்தி

Tuesday, July 10, 2012

கொஞ்சும் மழலைகளின் அசத்தும் புகைப்படங்கள்

தனது செயலினால்அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் குழந்தைகளின் அழகினைப் படத்தில் காணலாம்.
B

அன்புடன்
சக்தி

Thursday, June 28, 2012

மேலூர்-சென்னைக்கு இடையே புதிய பஸ் போக்குவரத்து: சாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

மதுரை மாவட்டம் மேலூர் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும். மேலூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வெளிநாடுகளில் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். சென்னையில் அலுவலகங்களில் பலர் வேலை செய்கின்றனர். மேலூரில் இருந்து ஏராளமானவர்கள் என்ஜினீயரிங் மற்றும் உயர்கல்வி படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சென்னை செல்ல பல பஸ்கள் மேலூர் உள்ளே வராமல் பைபாஸ் வழியாக செல்கின்றது. இதனால் மேலூரில் இருந்து சென்னை பஸ்சில் செல்ல மேலூர் பகுதி பொதுமக்கள் சிரமப்பட்டனர்.


மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. சாமி இது பற்றி சட்டசபையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். இவரது கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உடனடியாக மேலூரில் இருந்து சென்னைக்கு பஸ் விட உத்தரவிட்டார். அதோடு கடந்த 19-ந்தேதி முதல்வர் ஜெயலலிதா புதிய பஸ் போக்குவரத்தினை தொடங்கி வைத்தபோது மேலூருக்கும் நவீன சொகுசு பஸ் வழங்கினார்.


இந்த புதிய பஸ்சை மேலூரில் இருந்து சென்னைக்கு சாமி எம்.எல்.ஏ. கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இப்பஸ் தாலுகா அலுவலகம் முன்பு தினசரி இரவு 8.30 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு செல்லும். நவீன வசதிகளுடன் உள்ள இந்த பஸ்சில் சென்னை செல்ல கட்டணம் ரூ. 305 மட்டுமே. மேலும் இந்த பஸ் கருங்காலக்குடி, கொட்டாம்பட்டி ஆகிய ஊர்களிலும் பயணிகளை ஏற்றி செல்லும். இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சாமி எம்.எல்.ஏ. கூறினார்.


மதுரை மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ஜபார், நகராட்சி தலைவர் சரவணன், மேலூர் யூனியன் சேர்மன் செல்வராஜ், கொட்டாம்பட்டி யூனியன் சேர்மன் வெற்றிசெழியன், வல்லாளபட்டி சேர்மன் உமாபதி, மாவட்ட கவுன்சிலர் சூரக்குண்டு அம்பலம், மேலூர் யூனியன் துணைத் தலைவர் முருகன், நகர அவைத்தலைவர் நாகசுப்பிரமணியன், நகராட்சி முன்னாள் தலைவர் சாகுல்அமீது, தொகுதி இணைசெயலாளர் ஜீவசன்மார்க்கம், மாவட்ட இலக்கிய அணி தலைவர் மலைச்சாமி, கீழையூர் வேலு, ராமையா, ஒன்றிய அவைத்தலைவர் பிச்சைராஜன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கயஸ்முகமது, செல்வராஜ், அரசு போக்குவரத்துக் கழக டைம் கீப்பர் பீர்முகமது மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், நிர்வாகிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 
  
அன்புடன்                                                           நன்றி
  சக்தி                                                           மாலைமலர்

Wednesday, June 27, 2012

நீயா இறைவன்?

கடவுளை மனிதன் வணங்கலாம்
மனிதன் தன்னை தானே கடவுள் என்று கூறினால்
அதனை என்னவென்று சொல்வது
 இங்கே கடவுள் என்று கூறிக்கொண்டு தன்னை  தானே
விளம்பரப்படுத்திக் கொள்பவர்களை ...............?











அன்புடன்
  சக்தி