கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி பாகிஸ்தானிலிருந்து கடல் வழியாக படகு மூலம் மும்பையில் ஊடுருவிய லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள், ரயில் நிலையம் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் புகுந்து தாக்குதல் நடத்தினர்.பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து 60 மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், பாதுகாப்புப் படையினர், வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். இதில் 9 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். இதில் உயிருடன் பிடிபட்டவன்தான் இந்த கசாப்.
அஜ்மல் கசாப், பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பரித்கோட் என்ற கிராமத்தில் 1987, செப்.,13ம் தேதி பிறந்தான். முழுப்பெயர் முகமது அஜ்மல் அமீர் கசாப். பெயர் குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. பல பெயர்களில் இவன் அழைக்கப்பட்டான். பெற்றோர் ஷாபன் கசாப், நூர் இலாஹி. தந்தை பானி பூரி வியாபாரி. கசாபுக்கு இரண்டு சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.
2005ம் ஆண்டு, தந்தையுடன் சண்டையிட்டு, வீட்டை விட்டு வெளியேறினான். லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்தான். இவனுடன், 24 பேருக்கு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயிற்சி அளிக்கப்பட்டது. முதலில் உளவியல் ரீதியான பயிற்சி அளிக்கப்பட்டு, பின், படிப்படியாக நவீன ஆயுதங்களை கையாளுதல், இலக்கை தாக்குதல், கடலில் பயணம் செய்தல், நீச்சல், பாய்மர படகை இயக்குதல் போன்ற பயிற்சிகள் தரப்பட்டன.பயிற்சி பெற்ற குழுவிலிருந்து, சிறந்த 10 பேரை தேர்வு செய்து, மும்பை தாக்குதலை நடத்தினர். இதற்காக கசாப்புக்கு, 1.5 லட்சம் ரூபாய்
கொடுக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை விசாரணை நீதிமன்றம், 2010ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி கசாபுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை 2011 பிப்ரவரி 21ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இதுபோல் 2012 ஆகஸ்ட் 29ஆம் தேதி உச்ச நீதிமன்றமும் கசாபுக்கான மரண தண்டனையை உறுதி செய்தது.
பின்னர், கசாப் சார்பில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று, நவம்பர் 8ஆம் தேதி கசாபின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்தார். இதுகுறித்து மகாராஷ்டிர மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் அரசுக்கு முன்கூட்டியே தகவல்:
கசாபை தூக்கில் போடுவது தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கு முறைப்படி முன்கூட்டியே தகவல் தெரிவித்து விட்டதாக, தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே தெரிவித்தார்.
""கசாபின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பாக, நீதித்துறை நடவடிக்கைகள் அனைத்தும் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டன. அதாவது பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் கசாப் தூக்கு தண்டனை நிறைவேற்றம் குறித்து பாகிஸ்தான் அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதை அவர்கள் நிராகரித்தனர். பின்னர் ஃபேக்ஸ் மூலம் அந்தக் கடிதம் அனுப்பப்பட்டது'' என ஷிண்டே தெரிவித்தார்.
இந்திய எல்லையில் செயல்பட்டு வரும் கசாப் சார்ந்த பயங்கரவாத இயக்கத் தலைவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை. ஈவு இரக்கமின்றி அப்பாவி மக்களை பலிவாங்கும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோர்க்கு இதுபோன்ற தண்டனைகளை எவ்வித தயக்கமுமின்றி வழங்க வேண்டும்.
- பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி
அஜ்மல் கசாப் விஷயத்தில் இந்தியா சட்டத்துக்குள்பட்டு வழக்கை சரியாக நடத்தி முடித்துள்ளது. மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானில் நடைபெற்று வரும் வழக்கிலும் அந்நாடு இதைப்போல சரியாக நடந்துகொள்ளும் என்று நம்புகிறேன்.
- வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்
இந்த தண்டனையை வரவேற்கிறேன். மும்பை தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளையும் சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதி அப்சல் குரு தொடர்பான நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த வேண்டும்.
- காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங்
அன்புடன்
No comments:
Post a Comment