Thursday, July 26, 2012

மேலூரில் வாந்தி-வயிற்று போக்கு 70 பேர் பாதிப்பு

மேலூர் பகுதியில் வாந்தி-வயிற்று போக்கு காரணமாக 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.




அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலூரில் உள்ள அண்ணாகாலனி, முகமதியார்புரம், காந்திஜி பூங்கா ரோடு, நொண்டிகோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 70 பேருக்கு திடீரென வாந்தி-வயிற்று போக்கு ஏற்பட்டது. இவர்கள் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.



இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, இப்பகுதிகளில் குடிநீர் அசுத்தமாக வருகிறது. சுற்றுப்புற சுகாதாரமும் இல்லை. ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடப்பதால் கொசு தொல்லைகளும் அதிகரித்து உள்ளது. சுகாதாரமற்ற குடிநீரை குடிப்பதால் தான் இதுபோன்ற நோய் தாக்கப்படுகிறது. எனவே சுகாதாரதுறை அதிகாரிகள் உடனடியாக இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.



இதுபற்றி நகரசபை கமிஷனர் பாஸ்கரசேதுபதி கூறும்போது, வினியோகிக்கப்படும் தண்ணீர் சுத்தமாக தான் உள்ளது. இருப்பினும் தண்ணீரை ஆய்வுக்காக அனுப்பி இருக்கிறோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு கெட்டுபோன மீன்கள் குறைந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சமைத்து சாப்பிட்டதாலும், கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழத்தை சாப்பிட்டதாலும்தான் வாந்தி-வயிற்றுபோக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கெட்டுபோன பொருட்களையோ கல் மூலம் பழுக்க வைத்த பழங்களையோ சாப்பிட வேண்டாம். கல் மூலம் பழுக்க வைத்த மற்றும் கெட்டுபோன பொருட்களை விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அன்புடன்
 சக்தி

No comments: