Monday, January 30, 2012

இந்திய முறையில், மதுரை இன்ஜினியரை கரம் பிடித்த ஜப்பான் பெண்

மதுரை : மதுரையை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வெங்கடேஷை, ஜப்பானை சேர்ந்த மரிக்கோ நேற்று இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். மதுரை மேலமாடவீதியைச் சேர்ந்த எம்.ஜி.ஆர்., மன்ற துணை தலைவர் சோமசுந்தரம். இவரது மகன் வெங்கடேஷ், ஜப்பானில் டோக்கியோவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிகிறார். இவரும், டோக்கியோவில் வங்கி ஒன்றில் பணிபுரியும் மரிக்கோவும் காதலித்தனர். இவர்கள் காதலுக்கு இரு தரப்பு பெற்றோரும் பச்சைகொடி காட்டினார்.
 நேற்று இருவரும் மதுரையில் இந்து முறைப்படி திருமணம் செய்தனர். மரிக்கோ, தன் பெயரை "பிரியங்கா' என மாற்றி, பட்டுச் சேலை அணிந்து, கூடலழகர் பெருமாள் கோயிலில் வெங்கடேஷை கரம் பிடித்தார். சோமசுந்தரம் கூறியதாவது: வெங்கடேஷூக்கு பல இடங்களில் பெண் பார்த்தும், சரியாக அமையவில்லை. பிடித்த பெண்ணை கூறினால், திருமணம் செய்து வைப்பதாக அவரிடம் தெரிவித்தேன். அவர் தயங்கியபடி, மரிக்கோ குறித்து கூறினார். "இணையதளத்தில்' பார்த்த போது, மரிக்கோவை எங்களுக்கு பிடித்தது. திருமணத்திற்காக ஜன., 27ல் அவரது குடும்பத்தினர் மதுரை வந்தனர். ஜப்பானியர்கள் மரியாதை தெரிந்தவர்கள். மணமக்களுக்கு ஜப்பானிய மொழி, ஆங்கிலம் தெரிவதால், மொழி ஒரு தடையில்லை. அதேசமயம், நாங்கள் தமிழில் பேசுவதை மருமகள் புரிந்து கொண்டு சிரிக்கிறார், என்றார். அமைச்சர் செல்லூர் ராஜூ, மேயர் ராஜன்செல்லப்பா உட்பட பலர் மணமக்களை வாழ்த்தினர்.
நன்றி  தினமலர்
அன்புடன்
சக்தி

Friday, January 20, 2012

உங்கள் தொகுதி M.L.A.க்கு E-Mail.அனுப்ப வேண்டுமா?

ஒவ்வொரு தொகுதி M.L.A.க்கும் ஒரு E-Mail. I.D கொடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் உங்கள் "நியாயமான" கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம். எல்லாM.L.A.க்கும் லேப் டாப் கொடுக்கப்பட்டுள்ளது அதனால்... உங்கள் கோரிக்கைகளுக்கு கண்டிப்பாக பதில் கிடைக்கும் என நம்புவோம். 234 தொகுதி M.L.A.க்கும் தனி தனியே
 கொடுக்கப்பட்டுள்ளது

மதுரை இன்ஜினியரிங் மாணவர் சாதனை வாகன விபத்துகளை தடுக்க நவீன கேமரா கண்டுபிடிப்பு

வாகன விபத்துகளை தடுக்க நவீன ஒளிப்பதிவு கேமராவை மதுரையை சேர்ந்த இன்ஜினியரிங் மாணவர் கண்டு பிடித்துள்ளார். மதுரை திருநகர் பகுதியை சேர்ந்த முத்தையா என்பவரது மகன் நாகராஜ். பிடிஆர் இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் இறுதியாண்டு படித்து வருகிறார். இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், தங்கள் துறையில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, பிரத்யேக சாப்ட்வேரின் துணையுடன் வாகன விபத்துக்களை தடுக்கும் கருவியை நாகராஜ் கண்டு பிடித்துள்ளார். மேலும், காரை சுற்றிலும் 60 நாட்களாக நடந்த நிகழ்வுகளையும் இந்த கருவி பதிவு செய்து வைத்துக் கொள்கிறது.


மாணவர் நாகராஜ் கூறியதாவது:



கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் போது இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டது. எனவே, வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்தும் விபத்தை தடுக்கும் கருவியை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் ஆராய்ந்தேன். அதன் விளைவாக இறுதியாண்டில் இக்கருவியை கண்டறிந்தேன். காரின் இருபக்க கண்ணாடியிலும் ஜூம் லென்சுடன் கூடிய நவீன காமிரா பொருத்தப்பட்டு, காரின் இருபுறமும் 2 கிலோ மீட்டர் தூரத்தில் நடக்கும் நிகழ்வுகள் பதிவு செய்யப்படும். அதை காருக்குள் உள்ள எல்இடி டிஸ்ப்ளேயில் பார்த்துக் கொண்டே காரை ஓட்டலாம். இதனால் சிறந்த முறையில் காரை விபத்தில்லாமல் பாதுகாப்பாக ஓட்ட முடியும். மேலும், இதில் உள்ள பிரத்யேக சாப்ட்வேர் துணையுடன் தொடர்ந்து 60 நாட்கள் நிகழ்வுகளையும் பதிவு செய்து கொள்ளலாம்.



விபத்தை தடுக்க மட்டுமன்றி, கொலை மற்றும் கொலை முயற்சி நடந்த பிறகு அந்த நிகழ்வுகளையும் பார்த்துக் கொள்ளலாம். இதற்கென தனி பாஸ்வேர்டு இருப்பதால் காரின் உரிமையாளர் தவிர மற்றவர்கள் இதனை அறிய முடியாது. அறுபது நாட்களுக்கு பிறகு பென்டிரைவிலோ அல்லது சி.டி.யிலோ அந்த நிகழ்வுகளை பதிவு செய்து கொள்ளலாம்.

முக்கிய பிரமுகர்கள், காவல்துறை உட்பட அனைவருக்கும் இந்த கருவி பயனுள்ளதாக இருக்கும். தொடர்ந்து 15 நாட்கள் கடினமாக உழைத்து, ஸீ45 ஆயிரம் செலவில் இந்த கருவியை கண்டு பிடித்துள்ளேன். விரைவில் இக்கருவிக்காக காப்புரிமை பெற இருக்கிறேன்.

இவ்வாறு நாகராஜ் கூறினார்.

நன்றி தினகரன்


அன்புடன்
சக்தி

Tuesday, January 17, 2012

இந்து -முஸ்லிம் கொண்டாடும் சமத்துவ மாட்டுப் பொங்கல்

முஸ்லிம் மக்கள் கொண்டு வரும் ஆடையை, இந்து அம்பலகாரர் பெற்றுக் கொண்டு அதை அம்மனுக்கு சாத்தி, மாடுகளை தொழுவில் இருந்து அவிழ்த்துவிடும் "சமத்துவ பொங்கல்' மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடந்தது.


மேலூர் அருகே தும்பைப்பட்டி, முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த ஊர். இவ்வூர் வீரகாளியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் மாட்டுப் பொங்கல் அன்று சமத்துவ பொங்கல் வைப்பது வழக்கம். இங்குள்ள முஸ்லிம் குடும்பம் ஒன்று, பரம்பரை பரம்பரையாக கொண்டு வந்து கொடுக்கும் பட்டாடை அம்மனுக்கு இத் திருநாளில் அணிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு அக்குடும்பத்தை சேர்ந்த நாகூர் அனீபா தலையில் பட்டாடையும், பூமாலைகளும் சுமந்து, தாரை தப்பட்டை முழங்க வீரகாளியம்மன் கோயில் மந்தைக்கு வந்தார். அவரை வரவேற்று பதினெட்டுப்பட்டியை சேர்ந்த ஏழு அம்பலகாரர்கள் ஆடையை பெற்றுக் கொண்டனர்
கோயில் பூஜாரியான தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர், அப்பட்டாடையை அம்மனுக்கு சாத்தி அபிஷேங்கள் செய்தார். பின்னர் அவரே கோயில் மாட்டை முறைப்படி அவிழ்த்து விட்டு, மஞ்சுவிரட்டை துவக்கி வைத்தார்
அன்புடன்
 சக்தி

Monday, January 16, 2012

உலகின் மிகப்பெரிய திருக்குர்ஆன் புத்தகம்

ஆப்கானிஸ்தானில் உலகின் மிகப்பெரிய குர்ஆன் உருவாக்கப்பட்டுள்ளது.
7 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்ட இப்புனித நூல் 218 பக்கங்கள் கொண்டதாகவும், 30 வகையான எழுத்துவடிவங்களையும் கொண்டுள்ளது.
மேலும் இந்நூலை உருவாக்குவதற்கு 5 வருடங்கள் தேவைப்பட்டுள்ளன.
மொஹமட் சபீர் யாகோட்டிஹுஸைனி கேத்ரி என்பவர் தலைமையிலான குழுவினர் இந்நூலை உருவாக்கியுள்ளனர்.
இந்நூல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் முக்கிய மதப் பிரமுகர்கள் முன்னிலையில் திறந்துவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அன்புடன் சக்தி

Friday, January 13, 2012

அழியும் நிலையில் உள்ள அதிசயப் பாம்பு

பாம்பைப் பற்றி ஏராளமான சுவையான தகவல்கள் உண்டு



 பாம்பென்றால் படையும் நடுங்கும்
“பாம்புக்கு காதே இல்ல, ஆனா நம்ம எல்லாரையும் விட அதிகமா சப்தங்கள உணர்ற சக்தி அதுக்கு இருக்கு!”



“பாம்புகளுக்கு மூக்கே கிடையாது, ஆனா வாசனை நாற்றங்கள மிகச்சரியா உணர்ற திறன் இருக்கு!”



மாடுகளுக்கு கொம்பு  இருப்பதைப் பார்த்திருப்பிர்கள் .ஆனால் பாம்புக்கு  கொம்பு இருப்பதை எங்காவது   கேள்விப்பட்டதுண்டா?ஆப்பிரிக்க நாடான தான்சானியா காட்டு பகுதியில்ஆய்வு பணிகளை மேற்கொண்ட வனவிலங்கு ஆய்வாளர்கள்  கொம்பு முளைத்த பாம்பு ஒன்று நடமாடுவதை பார்த்தனர்



இந்த பாம்பு 2 அடி நீளம் உள்ளது. கறுப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. கண்ணுக்கு நேராக மேல் பகுதியில் கொம்புகள் முளைத்துள்ளன. எதற்காக பாம்புக்கு கொம்பு இருக்கிறது என்று தெரியவில்லை.





கண்ணை பாதுகாப்பதற்கும், இறைகளை கவர்வதற்கும் கொம்புகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் இது அழியும் இனவகை பாம்பாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்து ஆய்வுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்தியாவிலே 230 வகையான பாம்பினங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 இனங்களே நச்சுடையவை








.  

அன்புடன் சக்தி  

Friday, January 06, 2012

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒட்டகங்கள் திருவிழா




ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ஆண்டுதோறும் ஒட்டகங்கள் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 1ம் திகதி தொடங்கியது. (5.1.2012) வரை விழா நடக்கிறது.


இந்த திருவிழாவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஒட்டகங்கள் கலந்து கொண்டுள்ளன. ஒட்டகங்களுக்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதில் வெற்றி பெறும் ஒட்டகங்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.


மேலும் இதுபற்றி விழா அமைப்பாளர்கள் தெரிவிக்கையில், ஆண்டு தோறும் ஒட்டகங்கள் திருவிழா ஒரு வாரம் கொண்டாடப்படுகிறது. பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் 155 விதமான போட்டிகள் நடத்தப்படுகின்றன.




வெற்றி பெற்ற ஓட்டகங்களை ஊக்குவிக்கும் விதமாக 8.16 மில்லியன் டொலர் மதிப்புள்ள பரிசுகள் அளிக்கப்படும். அழகு போட்டி, ஓட்ட பந்தயம் மட்டுமின்றி அவற்றின் ஆரோக்கியம், பாலின் தரம், தளிர் நடை என பல்வேறு கட்டங்களில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் ஒட்டகங்களுக்கு மட்டுமின்றி அதன் உரிமையாளர்களுக்கும் சிறப்பு பரிசுகள் அளிக்கப்படும். கடைசி நாளன்று ஒட்டகங்கள் ஏலமும் இந்த கொண்டாட்டங்களில் களைகட்டுவதாக கூறினார்





அன்புடன் சக்தி