Monday, November 19, 2012

துபாயில் அடுக்கு மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து

Jumeirah Lake Towers (JLT
துபாயில்,34அடுக்கு மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.துபாயில், "ஜுமிரா லேக் டவர்ஸ்' என்ற கட்டடத்தில், நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 34 அடுக்குகள் கொண்ட இந்த கட்டடத்தில் தங்கியிருந்தவர்கள், உடனடியாக மீட்கப்பட்டனர்.
எனவே, யாரும் காயமடையவில்லை. ஆனால், கட்டடத்தில் இருந்த பொருட்கள் தீயில் கருகி நாசமாயின.மேலும் கட்டடத்தின் கீழே இருந்த கார்களும் சேதமானது . தீ விபத்துக்கான காரணம் குறித்து, விசாரணை நடக்கிறது




அன்புடன்
சக்தி

Wednesday, November 14, 2012

‘தீபாவளி ஸ்பெசல்' லேகியம்

தீபாவளிக்கு எண்ணெய் பலகராமும், நெய்யில் செய்த பட்சணங்களையும் ஒரு கட்டு கட்டியிருப்போம். திடீரென்று அதிக அளவில் எண்ணெய் பலகாரங்களை சாப்பிட்டதால் வயிறு கடா முடா என்று ஒரு வழி செய்து விடும். அஜீரணக் கோளாறு வேறு அவஸ்தையை ஏற்படுத்திவிடும். இதில் இருந்து தப்பிக்க கைவசம் ‘தீபாவளி ஸ்பெசல்' லேகியம் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவேண்டும் என்கின்றனர் அனுபவஸ்தர்கள்.


தீபாவளி லேகியம் செய்ய தேவையானப் பொருட்கள்
பெருங்காயம் - 25 கிராம்பேரிச்சை - கால் கிலோ
வெல்லம் - 100 கிராம்சீரகம் - 3 டீ ஸ்பூன்வால்மிளகு - 2திப்பிலி - 2
நெய் - 25
உப்பு - கால் டீ ஸ்பூன்
செய்முறை
பேரிச்சையை சுடுதண்ணீரில் நன்கு ஊறவைத்து, கொட்டையை நீக்கி மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
வெல்லம் தவிர சீரகம், திப்பிலி, வால்மிளகு, பெருங்காயம் ஆகியவற்றை பொடி செய்யவும்.
அடுப்பில் கடாயை வைத்து வெல்லத்தை பொடித்து போடவும். நெய் சேர்த்து கரைந்த உடன் பேரிச்சையை போடவும். இதனுடன் பொடித்து வைத்துள்ள கலவையைப் போட்டு கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். உப்பு சேர்த்து நன்கு கிளறவேண்டும். கலவை திரண்டு திக்காகி அல்வா பதம் உடன் இறக்கி ஆறவைத்து பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.
தீபாவளி லேகியம் சாப்பிடுவதன் மூலம் அஜீரணம் ஏற்படாது, வயிறுப் பொருமல் இருக்காது. சளி பிடிக்காது.
இதேபோல் மிளகு, இஞ்சி, ஓமம், திப்பிலி, கொத்தமல்லி, மஞ்சள்தூள், கசகசா, இலவங்கம், ஏலம், வெல்லம், நெய், நல்லெண்ணெய் சேர்த்து வேறு விதமாகவும் தீபாவளி லேகியம் செய்யலாம்.
தீபாவளி லேகியம் கையில் இருந்தால் தைரியமாக தீபாவளி பலகாரத்தை ஒரு பிடி பிடிக்கலாம்.
அன்புடன்
 சக்தி

Friday, November 09, 2012

இஸ்லாமியர்களுக்கு எதிரான படமா விஸ்வரூபம்? - கமல் பதில்

எந்த மதத்துக்கும் நான் எதிரி இல்லை. விஸ்வரூபம் படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானதில்லை, என்று கமல்ஹாஸன் தெரிவித்துள்ளார்.
விஸ்வரூபம் படம் ‘ஆரோ 3டி' ஒலி தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ளது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. டிரெய்லரை வெளியிட்டு கமலஹாசன் நிருபர்களிடம் பேசுகையில், விஸ்வரூபம்' இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிரான படமா? என்று கேட்டனர்.

அதற்கு கமல் பதிலளிக்கையில், "அப்படி நான் படம் எடுப்பேனா? இந்த படம் எந்த மதத்துக்கும் எதிரானது அல்லது. இந்தியாவில் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனபதே என் விருப்பம்.
நான் காந்தியின் பக்தன். இங்கு எந்த மதத்தினர் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று பார்க்க மாட்டேன். மனிதர்களைத்தான் பார்க்கிறேன். மதங்களை கொண்டாடுவது இல்லை. மனிதர்களை கொண்டாடுகிறேன். எந்த மதத்தினரையும் வித்தியாசமாக பார்ப்பது இல்லை. இந்த படமும் அப்படித்தான் இருக்கும். காந்தீய வழியிலேயே எனது அணுகுமுறைகளும் இருக்கும்," என்றார்.
அன்புடன்
 சக்தி

Friday, October 26, 2012

ம‌துரை- துபாய் இடையேயான நேர‌டி விமான‌ போக்குவரத்து

வ‌ளைகுடாவில் ப‌ணியாற்றும் தென் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் ப‌ல்லாண்டு க‌ன‌வான  ம‌துரை- துபாய் இடையேயான  நேர‌டி விமான‌ போக்குவரத்து  நிறைவேறும் சூழ்நிலை உருவாகி உள்ள‌து.மதுரையில் இருந்து துபாய், சார்ஜா ஆகிய பகுதிகளுக்கு விமானம் இயக்குவது குறித்த கலந்து ஆலோசனை கூட்டத்திற்கு ஈடிஏ நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் துபாயில் உள்ள‌ த‌மிழ் அமைப்புக‌ள் ம‌ற்றும் ஏர் இந்தியா நிறுவ‌ன‌ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்ட‌த்தில் ஏர் இந்தியா உள்நாட்டு மேலாள‌ர் மோக‌ன் பாபு, விற்ப‌னை மேலாள‌ர் ஆஸ்லி ரெவ்லோ, ஷார்ஜா விமான‌ நிலைய‌ மேலாள‌ர் க‌ண்ண‌ன், ஏர் இந்தியா துபாய் ச‌ர்வ‌தேச‌ மேலாள‌ர் ராதாகிருஷ்ண‌ன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஈடிஏ ம‌னித‌வ‌ள‌ மேம்பாட்டு துறை நிர்வாக‌ இய‌க்குனர் அக்ப‌ர்கான், ஈடிஏ வியாபாரம் மற்றும் கப்பல் துறை இய‌க்குந‌ர் நூருல் ஹ‌க், ஈடிஏ மத்திய கணக்கு துறை மேலாள‌ர் ஹ‌மீதுகான், ஈடிஏ த‌லைமை அலுவ‌ல‌க‌ மேலாள‌ர் மீரான், அமீர‌க‌த்தில் உள்ள‌ த‌மிழ‌க‌ அமைப்புக‌ள் சார்பில் ஜெக‌ந்நாத‌ன், அக‌ம‌து முகைதீன், கீழைராஸா, ஹ‌மீது ர‌ஹ்மான், ய‌ஹ்யா முகைதீன், கீழையாசீன், முதுவை ஹிதாய‌த் உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.
கலந்துரையாடல் கூட்டத்தில், அமீர‌க‌த்தில் 2 ல‌ட்ச‌ம் த‌மிழ் பேசும் ம‌க்க‌ள் வசிக்கின்ற‌ன‌ர். இவ‌ர்க‌ளில் தென் த‌மிழ‌க‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ள் நீண்ட‌தூர‌த்தில் உள்ள‌ விமான‌ நிலைய‌ங்க‌ளில் இருந்து த‌ங்க‌ளின் ஊர்க‌ளுக்கு செல்ல அவதிப்படுவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் ம‌துரையில் இருந்து துபாய், சார்ஜா போன்ற‌ ந‌க‌ர‌ங்க‌ளுக்கு விமான‌ங்க‌ள் இய‌க்க‌ப்பட்டால், ஏர் இந்தியாவுக்கு லாப‌க‌ர‌மான‌ வான் வ‌ழியாக‌ அமையும் என்றும், கேர‌ளாவிற்கு அதிக‌ விமான‌ங்க‌ள் இய‌க்கப்படுவ‌து போல் த‌மிழ‌க‌த்திற்கும் இய‌க்க‌ வேண்டும் என்றும், அதற்கான அனைத்து ஒத்துழைப்பும் ஈடிஏ மற்றும் த‌மிழ் ச‌ங்க‌ங்க‌ள் சார்பில் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் என்று தெரிவிக்கப்பட்டது.

Thursday, October 04, 2012

துபாயில் இலவச வேலைவாய்ப்பு சேவைஇணையதளம்

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட் தமிழ் சங்கம் சார்பில், இலவச வேலைவாய்ப்பு சேவை இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. வேலை தேடும் நபர்கள் இந்த இணையதளத்தில் தங்களின் விபரங்களை பதிவு செய்து பயன் பெறலாம்.

ஐக்கிய அரபு எமிரேட் தமிழ் சங்கம் சார்பாக இலவச வேலை வாய்ப்பு சேவை துவக்கப்பட்டுள்ளது. இதற்காக தனி இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வேலை தேடுவோர் தங்களின் பெயர், முகவரி, செல்போன் எண் உட்பட முழு விபரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதன்மூலம் ஐக்கிய அரபு எமிரேட் தமிழ் சங்கத்தின் இணையதளத்திற்கு வந்து செல்லும் நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளும். தமிழ் சங்கத்தின் இணையதளத்தில் வெளியாகி உள்ள நபரை, ஏதாவது நிறுவனம் மூலம் தேர்வு செய்ய விருப்பம் தெரிவித்தால், இது குறித்த தகவல் அந்த நபருக்கு தெரிவிக்கப்படும்.
இந்த இலவச சேவையை அனைவரும் பயன்படுத்தி பயன்பெறுமாறு ஐக்கிய அரபு எமிரேட் தமிழ் சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான ரமேஷ் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் விபரங்கள் மற்றும் உதவிக்கு, www.uaetamilsangam.com/utshelpdesk.asp என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
வேலை தேடுவோர் தங்களின் விபரங்களை பதிவு செய்ய www.uaetamilsangam.com/Jobcandwanted.asp என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம்.
அன்புடன்
சக்தி